சென்னை: ஐஐடியின் ராபர்ட் பாஷ் மையம் (IIT Madras Robert Bosch Centre) விக்கிபீடியாவில் பாலினத் தரவு இடைவெளியைக் குறைக்கும் திட்டத்தை தொடங்கி உள்ளது. இன்னும் ஓராண்டுக்குள், குறிப்பாக அடுத்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்துக்குள் (8 மார்ச் 2023), பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும், பல பெண்களின் சுயசரிதைகளை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த முன்முயற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் http://hiddenvoices.xyz/ என்ற இணையதளம் மூலம் பதிவுசெய்து செய்யலாம். இந்த திட்டம் குறித்து பேசிய பேராசிரியர் பலராமன் ரவீந்திரன், “டிஜிட்டல் தரவு தளங்களில் பெண்கள் பிரதிநிதித்துவத்தில் பற்றாக்குறை இருந்து வருகிறது.
'மறைக்கப்பட்ட குரல்கள்' என்ற பெயரில் நாங்கள் எடுக்கும் இந்த முன்முயற்சியானது, தரவுத் தளங்களில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை ஊக்குவிக்கும். இத்திட்டம் செயற்கை நுண்ணறிவு முறையில் செயல்படுத்தப்படுகிறது.
விக்கிபீடியா பாணி சுயசரிதையின் முதல் வரைவை தானாக உருவாக்கும் வகையில் தகவல் கேட்பாட்டு அணுகுமுறைகளை மேம்படுத்துதல், இயந்திரக் கற்றல் உதவியுடன் தன்னியக்க அடையாளம் அறிதல், வெளிப்புற ஆதாரங்களை சரிபார்த்தல், உரை பகுப்பாய்வு முறைகள் ஆகியவற்றை மேம்படுத்தும் குறிக்கோள்களுடன் இத்திட்டம் செயல்படவுள்ளது.
இத்திட்டத்தின் மூலம், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம் மற்றும் மேலாண்மை ஆகிய துறைகளில், சிறந்து விளங்கும் பெண்களுக்கான விக்கிபீடியா கட்டுரைகள் உருவாக்கப்படவுள்ளது. ஸ்டெம் துறைகள் (STEM) மற்றும் தொழில்நுட்பத்தை ஒட்டிய வணிகக் களங்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு சிறப்பாக செயல்படும், வடஅமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பெண்களின் வாழ்க்கை வரலாற்றை உருவாக்குவதன் மூலம், தங்களது பணியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.
பின்னர், நிபுணத்துவம் வாய்ந்த பகுதிகள், புவியியல் மற்றும் பிற குறைவான பிரதிநிதித்துவம் கொண்ட சமூகங்கள் ஆகியவற்றுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், உலக அளவிலான தரவுத் தளங்களில் பாலின வேறுபாட்டை குறைக்கும் முன்முயற்சியாக இத்திட்டம் இருக்கும்“ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கும் - சபாநாயகர் அப்பாவு