சென்னை: மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோயில் மேற்கு தெருவைச்சேர்ந்த குப்புசாமி(90)யின் மனைவி துர்காம்பாள்(74). இவரது கணவர் கடந்த 3.7.22 அன்று உயிரிழந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் என 3 பிள்ளைகள் உள்ளநிலையில் மூத்த மகனும் 2 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார்.
வீடு திரும்பிய மகன்: இதற்கிடையில் அமெரிக்காவிலுள்ள இவரது இளைய மகன் ராமகிருஷ்ணன் என்பவர், தந்தை இறுதி சடங்கிற்குக்கூட வரவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர் இவர்களின் குடும்ப வழக்கப்படி, 13ஆம் நாள் சடங்குக்காக மட்டும் அமெரிக்காவிலிருந்து ராமகிருஷ்ணன் வந்துள்ளார். வீட்டிற்கு வந்ததைத்தொடர்ந்து அவர், தனது தாயுடன் சென்று மயிலாப்பூரில் உள்ள ஒரு மடத்தில் தந்தைக்கான 13ஆம் நாள் சடங்குகளை செய்துள்ளார்.
தாயின் கோரிக்கை: அப்போது துர்காம்பாள் மகனிடம் தனக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த உதவியும் செய்யவில்லை எனவும்; எனக்குத் துணையாக இருந்த அப்பாவும் சென்றுவிட்டதால் தானும் உன்னுடன் அமெரிக்காவிற்கு வருவதாகத் தெரிவித்துள்ளார். இல்லையெனில் மாறாக, எனக்கு தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள உனது அக்கா வீட்டின் (மூதாட்டியின் மகள்) அருகில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுப்பதுடன் கைச்செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்துவிட்டு செல் என்று மகன் ராமகிருஷ்ணனிடம் தாய் கேட்டுள்ளார்.
மகனின் செயல் - லுக் அவுட் நோட்டீஸ்: இதனைக் கேட்ட ராதாகிருஷ்ணன், தாயை சென்னையில் ஏதாவது ஒரு ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டுச்செல்கிறேன் எனக் கூறியுள்ளார். இதனால், கோபமடைந்த அவரது சகோதரி, தாய் துர்காம்பாளை தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார். இந்த நிலையில் தனது வாழ்வாதாரத்துக்கு வழி செய்யாத மகன் ராமகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மயிலாப்பூர் காவல்நிலையத்தில் துர்காம்பாள் புகார் செய்தார். அதன்பேரில் முதியோர் பராமரிப்பு மற்றும் நலவாழ்வு சட்டத்தின் கீழ், ராமகிருஷ்ணன்மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி அவருக்கு லுக் அவுட் நோட்டீஸும் வழங்கியுள்ளனர்.
குண்டுக் கட்டாக கைது: ஆனால் ராமகிருஷ்ணன், தாய்க்கு எந்த உதவியும் செய்யாமல் அமெரிக்கா சென்று விடலாம் என அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று (ஆக.24) மயிலாப்பூர் போலீசார் அமெரிக்காவிற்கு செல்லவிருந்த ராமகிருஷ்ணனை அதிரடியாக கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்றத்தில் வாக்குமூலம்: இதனையடுத்து அமெரிக்க செல்ல முடியாதபடி, தனது நிலைமை விபரீதமாவதை உணர்ந்த ராமகிருஷ்ணன், மேஜிஸ்திரேட் சுப்பிரமணியனிடம் வருத்தம் தெரிவித்தார். மேலும், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது தாய் துர்காம்பாளின் ஸ்டேட் வங்கிக் கணக்கில் ரூ.3 லட்சம் செலுத்தினார். ஒரு வாரத்துக்குள் மேலும், ரூ.5 லட்சம் தாயாருக்கு அளிக்கிறேன் எனவும் மேஜிஸ்திரேட்டிடம் ராமகிருஷ்ணன் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து மேஜிஸ்திரேட் சுப்பிரமணியன், ஜாமீனில் ராமகிருஷ்ணனை விடுவித்தார். மூதாட்டியின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்த காவல்துறை அலுவலர்களுக்கும் மேஜிஸ்திரேட் சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்தார். ராமகிருஷ்ணன் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ராமகிருஷ்ணனின் பாஸ்போர்ட் விசா உள்ளிட்ட ஆவணங்களையும் மயிலாப்பூர் போலீசார் பறிமுதல் செய்து தங்கள் வசம் வைத்துள்ளனர்.
இவ்வாறு சென்னையில் பெற்ற தாயை தன்னுடன் வைத்துக் கொள்ளவும், தாய்க்கு வேண்டியவற்றை செய்து அவரைப் பார்த்துக் கொள்ளவேண்டிய மறுத்த மகனை போலீசார் வெளிநாட்டிற்குச் செல்லாமல் தடுத்து நிறுத்தியதும்; நீதிமன்றத்தில் கைதான மகன் தவறை உணர்ந்து மனம் திருந்திய சம்பவமும் அடுத்தடுத்து நிகழ்ந்தது.
இதையும் படிங்க: பல கோடி மதிப்புள்ள நிலங்களை கையாடல் செய்த ஆந்திர முதலமைச்சரின் குடும்பம்