ஜெயலலிதாவின் கொடநாடு மாளிகைக்குள் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நுழைந்த கும்பல், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை கொலை செய்து விட்டு, பங்களாவில் இருந்த சில ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றது. இது தொடர்பாக, சயான், மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த தீபு, சதீசன், சந்தோஷ் ஆகியோர், நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகாததால் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி அவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த பிடியாணை உத்தரவை திரும்பப் பெறக்கோரி தீபு உள்ளிட்டோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், கேரளாவில் இருக்கும் தங்களால் கரோனா காரணமாக விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்றும், தமிழ்நாட்டிற்கு வந்தால் தங்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் அடுத்த விசாரணையின் போது தீபு, சதீசன், சந்தோஷ் ஆகியோர் ஆஜராகவில்லையெனில், மீண்டும் அவர்கள் மீது பிடியாணை உத்தரவு பிறப்பிக்கலாம் என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பேரிடர் மேலாண்மை சட்டப்படியே அரியர் தேர்வு ரத்து - தமிழ்நாடு அரசு