அரசியல் கட்சி தொடங்கி மக்கள் பணி ஆற்ற முடிவெடுத்த நடிகர் ரஜினிகாந்த், தனது உடல் நலனை கருத்தில் கொண்டு அந்த முடிவில் இருந்து விலகுவதாக இன்று (டிசம்பர் 29) அறிக்கை வெளியிட்டார்.
அதில், கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாகவும், இதை அறிவிக்கும்போது ஏற்பட்ட வலி, தனக்கு மட்டுமே தெரியும், இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், தான் கட்சி ஆரம்பிப்பேன் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கும் ஏமாற்றம் அளிக்கும். எனவே, தன்னை மன்னித்து விடுங்கள் என்று ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக, ரஜினிகாந்த் தொடங்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்த அர்ஜுன மூர்த்தி ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில், ரஜினிகாந்தின் மனவேதனை தனக்கு புரியும் என்றும் அவரது முடிவை முழு மனதுடன் ஏற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.