ETV Bharat / city

வீழ்ச்சியை நோக்கி பயணிக்கின்றனவா கம்யூனிஸ்ட் கட்சிகள்? - சிபிஐ

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 1957 முதல் 2016 வரை அங்கம் வகித்த இடதுசாரி கட்சிகள், முதன்முறையாக 2016 சட்டப்பேரவையில் இடம்பெறாமல் போயின. இந்நிலையில், தற்போது திமுக கூட்டணியில் குறைந்த இடங்களைப் பெற்று போட்டியிடுவது கம்யூனிஸ்ட் கட்சிகளின் வீழ்ச்சியைக் காட்டுகிறதா?

cpi cpm
cpi cpm
author img

By

Published : Mar 29, 2021, 9:38 PM IST

Updated : Mar 29, 2021, 10:38 PM IST

நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பல இருந்தாலும், தேர்தல் அரசியலுக்கு வந்த இருபெரும் இயக்கங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிஎம்)தான். இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத ஒரு ஆட்சியை கம்யூனிஸ்டுகளே முதன்முதலில் மாநில அளவில் தந்தனர்.

மேற்கு வங்கத்தை நீண்ட நெடிய காலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் தன் ஆளுகையில் வைத்திருந்தது. அதேபோல் கேரளாவில் இன்றும் ஆள்வது மார்க்சிஸ்ட்தான். அடுத்தும் அவர்கள்தான் என்கின்றன கணிப்புகள். திரிபுராவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டாலும், அதன் கட்டமைப்புகள் அப்படியே இருக்கின்றன.

தமிழ்நாட்டில் அவர்கள் ஆட்சியில் இருந்ததில்லை. ஆனால், இங்கிருக்கும் தலைவர்கள் அவர்களை விட்டுக்கொடுப்பதுமில்லை. ஒருமுறை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேசியபோதுகூட, பெரியாரைச் சந்தித்திருக்காவிட்டால் தான் ஒரு கம்யூனிஸ்டாக இருந்திருப்பேன் என்றார். மேலும், தனது மகனுக்கு மு.க. ஸ்டாலின் என்று, அவ்வியக்க ஆசான்களில் ஒருவரது பெயரையும் வைத்தார் அவர். அந்தளவிற்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கை தாக்கம் இங்குள்ள திராவிட கட்சிகளுக்கும் இருந்துள்ளது. அதேபோல், காலங்காலமாக சட்டப்பேரவையிலும் அவர்களின் பங்கு இருந்தே வந்திருக்கிறது.

வீழ்கிறதா கம்யூனிஸ்ட் கட்சிகள்?
வீழ்கின்றனவா கம்யூனிஸ்ட் கட்சிகள்?

இந்நிலையில்தான், கடந்த 64 ஆண்டு கால தமிழ்நாடு அரசியல் வரலாற்றில், கம்யூனிஸ்டுகளே இல்லாத சட்டப்பேரவை, 2016இல் அமைந்தது. தேர்தலும் வாக்கும் தங்களுக்கு இரண்டாம்பட்சம்தான் என்று சொல்லும் இடதுசாரிகள், எளிய மக்களின் உரிமை மீட்பே தங்களது முதல் குறிக்கோள் என்பார்கள்.

இருப்பினும் அதனை வாதாடிப்பெற தேர்தல் ஜனநாயகத்தைப் பின்தொடரும் கம்யூனிஸ்டுகள், சட்டப்பேரவையில் அங்கம் வகிப்பதும் அவசியமாகிறது. 2016 தேர்தலில் தலா 25 இடங்களைப் பெற்று ஒரு இடத்தில்கூட வெல்ல முடியாத இக்கட்சிகள், இம்முறை திமுக கூட்டணியில் தலா 6 இடங்களில் போட்டியிடுகின்றன. கடந்த காலங்களைவிட இது மிகக் குறைந்த இடங்கள் என்கிறபோது, கம்யூனிஸ்டுகள் தங்களைச் சுயபரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்காக வாக்கு கேட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள், 2016ஆம் ஆண்டு தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையேற்று மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் மூன்றாவது அணி அமைத்தனர். அதில் வெறும் 1.5% வாக்குகளைப் பெற்று, ஒரு காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த இடதுசாரி கட்சிகள், ஒரு இடம்கூடப் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

குறைந்த எண்ணிக்கையில் திமுக அணியில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சிகள்!

மற்ற கட்சியினர்போல் செல்வச்சீமான்களைக் கொண்டவை அல்ல கம்யூனிஸ்ட் கட்சிகள். அடித்தட்டு விளிம்புநிலை மக்களுக்காகவும், தொழிலாளர் உரிமைகளுக்காகவும் தம் வாழ்வை ஒப்படைத்த எண்ணற்றப் பெருந்தலைவர்களைக் கொண்ட கட்சிகள்தான் இரண்டும். இன்றளவிலும், நல்லகண்ணு, சங்கரய்யா போன்ற வழிகாட்டிகள் பொதுவாழ்விற்கு முன்மாதிரிகளாக அங்கு திகழவே செய்கின்றனர்.

மதுரையில் இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த நன்மாறன், இரு மாதங்களுக்கு முன்பு, இருக்க வீடு கேட்டு ஆட்சியரிடம் மனு கொடுத்த நிகழ்வுகளையும், நாம் கம்யூனிஸ்ட் கட்சிகளில்தான் பார்க்க முடியும். பிற அரசியல் கட்சிகளின் மீது சொல்லும் அளவிற்கு இக்கட்சிகளை மக்கள் விமர்சிப்பதில்லை என்றாலும், மக்களின் நம்பிக்கையைப் பெற அவர்களுக்கு இன்னும் வேலை இருக்கவே செய்கிறது.

1989ஆம் ஆண்டு சிபிஐ, ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவிலும், சிபிஎம் திமுக அணியிலும் இடம்பெற்றன. 1996இல் சிபிஐ, அதிமுக அணியிலும், சிபிஎம் வைகோ தலைமையிலான அணியிலும் இடம்பெற்றன. பின்னர் 2001 முதல் அதிமுக, திமுக என கூட்டணி வைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பெற்றுவந்தனர். அதிகபட்சமாக எம்ஜிஆருடன் கூட்டணி அமைத்தபோது, 20 இடங்களைப் பெற்ற கம்யூனிஸ்ட் கட்சிகள், 2001இல் 11 இடங்களையும், 2006இல் 15 இடங்களையும், 2011இல் 19 இடங்களையும் பெற்றுள்ளனர்.

வீழ்கின்றனவா கம்யூனிஸ்ட் கட்சிகள்?

பாஜகவை கொள்கை எதிரியாகக் கொண்ட கம்யூனிஸ்டுகள், இதுவரை ஒருமுறைகூட அக்கட்சியுடன் கூட்டணி வைத்ததில்லை. ஆனால், மற்ற கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைப்பதால்தான் மக்களிடமிருந்து அந்நியப்படுகிறீர்களா என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வீரபாண்டியனிடம் நாம் கேட்டோம். “ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடதுசாரி கட்சிகள் கூட்டணி வைப்பதும் ஒரு அரசியல் நிலைப்பாடுதான். பாஜகவை உள்ளே விடக்கூடாது என்கிற அரசியல் நிலைப்பாடால்தான், குறைவான எண்ணிக்கையானாலும் திமுக அணியில் போட்டியிடுகிறோம்.

எதிர்கால இளம் தலைமுறை கம்யூனிஸ்டுகளின் பக்கம் திரும்பும் என்கிற நம்பிக்கையும், தேவையும் இருக்கிறது. அத்தோடு கட்சியை வலுப்படுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது” என்கிறார் வீரபாண்டியன்.

இதே கருத்தை வெளிப்படுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், திமுக கூட்டணியில் குறைவான இடங்களைப் பெற்றுள்ளதால் எந்த வருத்தமும் இல்லை என்றும், இது கொள்கைக்கான கூட்டணி என்பதால், மதச்சார்பு சக்திகள் தமிழ்நாட்டிற்குள் வந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த நிலையை எடுத்ததாகவும் கூறினார். மேலும், இம்முறை கணிசமான உறுப்பினர்களுடன் சட்டப்பேரவைக்குள் நுழைவோம் என்கின்றனர் அக்கட்சியினர்.

இன்னும் வேலை செய்ய வேண்டியதை கம்யூனிஸ்ட்கள் உணர வேண்டும்

இவை அனைத்தையும் தாண்டி நீண்ட காலத்திற்கு கட்சி நிலைத்து தனித்து இயங்க, அதனை அமைப்பு ரீதியாக இன்னும் பலப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதே, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் கவனித்துவரும் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

மேலும், மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதில் மற்ற கட்சிகள் கம்யூனிஸ்டுகளிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அதேவேளையில், மக்களோடு மக்களாக இன்னும் வேலை செய்ய வேண்டிய தேவை இருப்பதை, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் உணர வேண்டும். ஏனெனில், அவர்களின் முன்னோர்கள் அதையே இங்குச் செய்தனர்.

இதையும் படிங்க: 'அதிமுகவின் முககவசத்தை அகற்றினால் ஆர்எஸ்எஸ் முகமே தெரியும்'

Last Updated : Mar 29, 2021, 10:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.