முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழ்நாடு அரசால் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதனையடுத்து ஜெயலலிதாவின் நண்பர்கள், அவருடன் பணியாற்றிய அதிகாரிகள், அமைச்சர்கள், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் இந்த ஆணையம் விசாரணை செய்துவந்தது.
இந்நிலையில், மருத்துவ நிபுணத்துவம் இல்லாததால் ஆறுமுகசாமி ஆணையம் இந்த விவகாரத்தை விசாரிக்கக் கூடாது எனவும், தங்கள் தரப்பு மருத்துவர்களை விசாரிக்க 21 பேர் கொண்ட மருத்துவர் குழுவை அமைக்க வேண்டும் எனவும் அப்போலோ மருத்துவமனை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணையம் 90 விழுக்காடு விசாரணையை முடித்துவிட்டதால் அப்போலோவின் கோரிக்கையை ஏற்கமுடியாது எனக்கூறி வழக்கை முடித்துவைத்தது. மேலும், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சட்டப்படி தனது விசாரணையை தொடங்கலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.