சென்னை: தமிழ்நாடு முழுவதும் வடகிழக்குப் பருவமழை இந்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் கரோனா பரவல் உச்சத்திலிருந்த கால கட்டத்தில் கரோனா தடுப்புப் பணி மற்றும் கண்காணிப்பு அலுவலர்களாக அனைத்து மாவட்டங்களுக்கும் ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டனர்.
தற்போது வடகிழக்குப் பருவமழைத் தொடங்கவுள்ள நிலையில் சென்னையிலுள்ள 15 மண்டலங்களுக்கும் தனித்தனி ஆட்சியர்களை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
அதேப்போல் தமிழ்நாட்டிலுள்ள மற்ற மாவட்டங்களைப் பொறுத்த வரையில் கரோனா தடுப்புப் பணிக்காக நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்களே வடகிழக்குப் பருவமழைக்கும் கண்காணிப்பு அலுவலர்களாகப் பணியாற்றுவார்கள் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வடகிழக்குப் பருவமழைக்கான முன்னேற்பாடுகள், பாதிக்கப்படும் பகுதிகளைக் கண்டறிந்து அவற்றில் பாதிப்புகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், முகாம்கள் அமைத்தல், தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்தல், போதுமான மருத்துவ வசதிகளைக் கையிருப்பில் வைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு அரசிற்கு அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 18 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!