சென்னை: மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை குழுவின் செயலாளர் வசந்தாமணி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது, "தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலைப் பட்டபடிப்பான பிஎஸ்சி நா்சிங், பி.ஃபார்ம், பிஎஸ்சி ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, ரேடியோதெரபி, இருதயவியல் உள்ளிட்ட மருத்துவம் சாா்ந்த 19 வகையான பட்டப்படிப்புகள் உள்ளன.
இந்த படிப்புகளுக்கு 12 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு மருத்துவக்கல்வி இணையதளத்தில் அக்டோபர் 25ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் மருத்துவக் கல்வி இயக்குநரக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மாணவர்களுக்கு படிப்பு சார்ந்த சந்தேகங்களை தீர்ப்பதற்காக அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கான உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை கேட்டறிந்து தெரிந்து கொள்ளலாம்.
19 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 19 வகையான மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பில் 2276 இடங்களும், 315 தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த 4 பட்டப்படிப்பில் 13,832 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. மாணவர்களுக்கான தகவல் கையேட்டில் பட்டப் படிப்பு குறித்தும், அதற்கான வழிகாட்டுதல் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. அதனை மாணவர்கள் படித்து தெரிந்துக் கொள்ள வேண்டும். மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு வேலை வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் எம்.பி.பி.எஸ் கலந்தாய்விற்கு பின்னர் மருத்துவம் சார்ந்த படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறும். தற்போது கரோனா காலம் என்பதாலும், நீட் தேர்வு கால தமாதமாக நடத்தப்பட்டதால், முன்கூட்டியே மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்பிற்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு விடைத்தாள் நகல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கான மதிப்பெண்கள் தெரியும்.
எனவே அவர்கள் இந்தப் படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியும். இளநிலை மருத்துவப் படிப்பான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பை தேர்வு செய்திருந்தாலும் மருத்துவப்படிப்பினை தேர்வு செய்து சேரலாம்.
மருத்துவம் சார்ந்த பட்டபடிப்புகளுக்கு தற்போது முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது. மாணவர்கள் தங்கள் விருப்பப் பாடப்பிரிவு மற்றும் கல்லூரிகளை தேர்வு செய்யும்போது கவனமுடன் செயல்பட வேண்டும். மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரி, பாடப்பிரிவுகளை எத்தனை வேண்டுமானாலும் வரிசை முறைப்படி பதிவு செய்யலாம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: காங்கிரஸிற்கு டா டா... தனிக்கட்சி... கேப்டன் அமரீந்தர் அதிரடி!