சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜனவரி 27ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில், அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வும், அதனைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஜனவரி 30ஆம் தேதி தொடங்கியது. முதல் சுற்று கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
அதேபோல், அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்த மாணவர்களும் வகுப்புகளில் சேர்ந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை குழு இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.
2ஆம் கலந்தாய்வு தொடக்கம்
இதுகுறித்து, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு செயலாளர் வசந்தாமணி கூறும்போது, "தமிழ்நாட்டில் காலியாக உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கப்பட்டுள்ளது. மே 7, 8 ஆகிய தேதிகளில் மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்யலாம். அதனைத் தொடர்ந்து ஒதுக்கீட்டு இடங்கள் அறிவிக்கப்படும்.
எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 121 இடங்களுக்கும், இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் மூன்று இடங்களுக்கும், சுயநிதி மருத்துவக் கல்லூரியில் 141 இடங்களுக்கும் என 271 இடங்கள் காலியாக உள்ளன.
அதேபோல், பல் மருத்துவ படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 38 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 575 இடங்களுக்கும் என 613 இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
மாணவர்களுக்கு புதிய வாய்ப்பு
மேலும், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்று முடிவடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 31 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 812 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்பட்டது. இதில், தற்போது சுமார் 350 இடங்கள் காலியாக உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டில் மாப்-அப் கலந்தாய்வில் (Mop Up Counselling) பங்கேற்க மார்ச் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை புதிதாகவும் மாணவர்கள் பதிவு செய்யலாம்.
மேலும், மாணவர்கள் தங்களுக்கு விரும்பும் கல்லூரிகளை தேர்வு செய்ய முடியும். அதன் பின்னரும், இடங்களை தேர்வு செய்யும் மாணவர்கள் கல்லூரியில் சேராமல் காலியாக இருந்தால் ஏற்கனவே மாப்-ஆப் கலந்தாய்வில் பதிவு செய்த மாணவர்களில் இருந்து ஸ்ட்ரே வேக்கன்சிக்கு (Stray Vacancy) மாணவர்கள் அழைக்கப்பட்டு மருத்துவ படிப்பில் இடங்கள் ஒதுக்கப்படும். எனவே அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பம் செய்யாத மாணவர்களும் தற்போது விண்ணப்பிக்க வேண்டும்" என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் காலியிடங்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு மாணவர்கள் இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.