மத்திய அரசின் 14ஆவது நிதிக்குழுப் பரிந்துரையின் அடிப்படையில், கிராமப்புறங்களில் சாலை அமைப்பது தொடர்பான 2,370 கோடி ரூபாய் செலவிலான திட்டங்களை, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களே கையாளுவதை உயர் நீதிமன்றம் ரத்துசெய்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் தேவனந்தல் பஞ்சாயத்து தலைவர் ரமேஷ் உள்ளிட்ட ஏழு பஞ்சாயத்து தலைவர்கள், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளனர்.
அதில், "கிராம பஞ்சாயத்துகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் மிஷன் என்ற மத்திய அரசின் சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தில், தமிழ்நாட்டில் 2370.67 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு ஒரு கோடியே 66 லட்சத்து 54 ஆயிரத்து 45 குடிநீர் இணைப்புகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இத்திட்டத்தை அமல்படுத்துவது, நிர்வகிப்பது, கண்காணிப்பது, பராமரிப்பது உள்ளிட்ட எந்த ஒரு முடிவையும் ஊராட்சி மன்றங்களுக்கு வழங்காமல், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களே நேரடியாக கையாண்டு, டெண்டர்கள் விட்டுள்ளதால் வழக்கை விசாரித்த தனி நீதிபதி, டெண்டரை ரத்துசெய்துள்ளதற்குத் தடைவிதிக்க வேண்டும்" என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது ஒரு முக்கியமான வழக்கு என்பதால், அதனை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும், எனவே வழக்கை நவம்பர் முதல் வாரத்தில் முழுமையாக விசாரிப்பதாகவும் கூறி நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ரூ.26.85 கோடியில் பழவேற்காடு ஏரி சீரமைப்பு பணி - அமைச்சர் ஜெயக்குமார்