திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன் கரோனா பாதிப்பின் காரணமாக இன்று (ஜூன் 10) மருத்துவமனையில் உயிரிழந்தார். தனது பிறந்தநாளான இன்று உயிரிழந்த அன்பழகன், கடந்த 2ஆம் தேதி கரோனா பெருந்தொற்று அறிகுறி காரணமாக பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டார்.
பரிசோதனையில் அன்பழகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அன்று இரவே சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஜூன் 4ஆம் தேதி, அன்பழகன் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார் என்றும், அவருக்கு 80 விழுக்காடு ஆக்சிஜென், உயிர்காக்கும் கருவிகள் மூலம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
அடுத்த நாள் ஜூன் 5 ஆம் தேதி காலை அன்பழகன் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும் 67 விழுக்காடு வரை ஆக்சிஜென், உயிர்காக்கும் கருவி மூலம் வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தகவல் தெரிவித்தது.
ஜூன் 6 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் அன்பழகனுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும், அவர் உடல் நலன் குறித்தும் அவர் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனை மருத்துவ குழுவினரிடம் நேரில் கேட்டறிந்தார்.
ஜூன் 10ஆம் தேதியான இன்று அன்பழகனின் பிறந்தநாள். பிறந்தநாள் அன்றே அன்பழகன் மரணமடைந்துள்ளது திமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்பழகன் மரணத்தை தொடர்ந்து திமுக சார்பாக மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது. கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் மூன்று நாட்கள் ஒத்திவைக்கப்பட உள்ளதாகவும், திமுக கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது' - ஜெ. அன்பழகன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்