கரோனாவின் கைவண்ணத்தால் கடந்த மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கிய நாட்டு மக்கள் இன்னும் வெளிவர முடியவில்லை. தமிழ்நாட்டிலும் கரோனா கால் பதிக்காத இடமில்லை என்னும் அளவில் மாநிலம் முழுவதையும் முடக்கியுள்ளது. கரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டாலும், அதன் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனையடுத்து திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் மாவட்டங்கள் மிதமான பாதிப்புக்குள்ளான ஆரஞ்சு மண்டலங்கள் எனவும், கிருஷ்ணகிரி கரோனா தொற்று ஏதுமில்லா பச்சை மண்டலம் எனவும், பிற மாவட்டங்கள் தொற்று கடுமையாக உள்ள சிவப்பு மண்டலமாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கரோனா பரவல் 3ஆம் கட்டத்தை எட்டாமல் தடுக்க சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகள் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் நான்கு நாட்கள் முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அதேநேரத்தில், நம்பிக்கை அளிக்கும் நிகழ்வாக கரோனா தொற்றுக்குள்ளான சுமார் 70க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பியதால், ஈரோடு மாவட்டமும் கரோனா தொற்றிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு, ஆரஞ்சு மண்டலம் என்ற நிலையை எட்டி வருகிறது. ஆகவே, தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே பச்சை மண்டலமாக இருக்கிறது. ஆனாலும் இம்மாவட்டத்திற்கு ஊரடங்கிலிருந்து முழுமையான தளர்வுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
முதல்கட்டமாக சில ஆலைகள் மட்டும் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. சுத்திகரிப்பு நிலையங்கள், இரும்பு, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்ட ரசாயன ஆலைகள், கரும்பு, உர ஆலை, கண்ணாடி, டயர் ஆலைகள், மிகப்பெரிய காகித ஆலைகள் உள்ளிட்டவை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கிராமப்புற பகுதிகளில் நீர்நிலைகள் தூர்வாருதல், நீர்ப்பாசனம், அணைப் பாதுகாப்பு, சாலை, பாலங்கள், செங்கல் சூளை போன்ற பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளில் கட்டுமானம், பராமரிப்புப் பணிகள், குடிநீர் விநியோகம், தூய்மைப் பணிகள், 100 நாள் வேலை, மின்சாரம் தொடர்பான பணிகள் ஆகியவையும் மேற்கொள்ளலாம். இந்தத் தளர்வுகள் ஆரஞ்சு மண்டலங்களில் உள்ள கரோனா பாதிக்காத சில பகுதிகளுக்கும் பொருந்தும்.
மேலும், மே 3 ஆம் தேதிக்குப் பிறகு மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 33 விழுக்காடு ஊழியர்களுடன் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சிவப்பு நிற மண்டலங்களுக்கு இதுவரை தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனவே, இப்பகுதிகளில் மே 3 ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது. இந்நிலையில், நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனைக்குப் பின்னரே, ஊரடங்குத் தளர்வுகள் குறித்து முழுமையான தகவல்கள் வெளிவரும் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ’202’ - சென்னையில் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ள தெருக்களின் எண்ணிக்கை!