சென்னை: திருவண்ணாமலை மாவட்டம், பெருங்குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கோதி என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் விவசாய நிலத்தில், கடந்த மே 24ஆம் தேதி சந்தேகத்திற்குரிய முறையில் இறந்துகிடந்தார். இந்நிலையில், தனது தந்தையை தொந்தி மற்றும் ஆனந்தன் ஆகிய இருவரும் தான் முன்விரோதம் காரணமாக கொலை செய்துள்ளனர் என சங்கோதியின் மகன் சின்னமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
தனது தந்தை சங்கோதியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பிரேதப் பரிசோதனையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும்; தாங்கள் தெரிவிக்கும் மருத்துவரைக் கொண்டு பிரேதப் பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
மறுப்புதெரிவித்த காவல் துறை: இந்த மனு நீதிபதி பரதச்சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கின் விசாரணை நடைபெற்று வருவதாகவும், காவல் துறை யாரையும் காப்பாற்ற முயற்சிக்கவில்லை எனவும் தெரிவித்தார். மேலும், விசாரணைக்கு மனுதாரர் தரப்பில் ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மூத்த உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப்பேராசிரியர், விழுப்புரம் மருத்துவக்கல்லூரி தடயவியல் நிபுணர் ஆகியோர் கொண்ட குழுவினர், சங்கோதியின் உடலைப் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
பிரேதப்பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்ய அறிவுறுத்திய நீதிபதி, 24 மணி நேரத்திற்குள் பிரேதப் பரிசோதனை அறிக்கையை காவல் துறைக்கு வழங்கவேண்டும் என்றும்; 48 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். மேலும், விசாரணை நிலை குறித்த அறிக்கையுடன், பதில் மனுவையும் தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை ஜூன் 6ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: மின்சார ரயில் நடைமேடையில் ஏறிய விவகாரம் - ஓட்டுநர் சஸ்பெண்ட்!