சென்னை: உயர்கல்வித்துறையில் நடப்பு பருவத்தில் நடைபெறும் ஆன்லைன் தேர்வின் மூலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் 20 லட்சத்து 875 மாணவர்கள் பயன் அடைவார்கள் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் நடப்பு பருவத்திற்கு நேரடியாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்தது. அதன் அடிப்படையில் இறுதிப் பருவத்தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர, பிறப் பருவத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் உயர்கல்வித்துறை ஆன்லைன் தேர்வுகள் யாருக்குப் பொருந்தும் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளது.
அதில், பாலிடெக்னிக் - 1,3,5 - வது செமஸ்டர் , பொறியியல் 3,5,7 - வது செமஸ்டர், பட்டப்படிப்பு இளநிலை தேர்வுகளில் 1,3,5 - வது செமஸ்டர், முதுகலை (PG ) பட்டப்படிப்புகளுக்கு 1 , 3 ஆவது செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும்.
இளங்கலையில் நேரடித் தேர்வு
நேரடி தேர்வு (Offline), இறுதி ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு (Outgoing Students) இறுதி செமஸ்டர் மட்டும் பொருந்தும் . கலை அறிவியல் படிப்பில் இளநிலை மாணவர்களுக்கு (UG) 6 ஆவது செமஸ்டர் மற்றும் முதுகலை (PG) மாணவர்களுக்கு 4 ஆவது செமஸ்டர் ஆகும் . பொறியியல் 8 ஆவது செமஸ்டர் நேரடி தேர்வு (offline ) நடைபெறும்.
முதுகலைப் படிப்பில் ஆன்லைன் தேர்வு
எம்.ஏ, எம்.எஸ்.சி முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு 1 , 3ஆவது செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும். எம்.இ 3ஆவது செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும். இறுதி செமஸ்டர் தேர்வுகள் அதாவது 4ஆவது செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக (Offline) நடத்தப்படும். அரியர் தேர்வுகள் தற்போது ஆன்லைனில் நடைபெறும்.
தேர்வினை எழுதும் மாணவர்கள் விபரம்
கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் 12 லட்சத்து 94 ஆயிரத்து 51 மாணவர்கள், பல்கலைக் கழகங்களில் இருந்து 52 ஆயிரத்து 301 மாணவர்கள், பொறியியல் கல்லூரிகளில் இருந்து 4 லட்சத்து 57 ஆயிரத்து 196 மாணவர்கள், பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து 1 லட்சத்து 97 ஆயிரத்து 327 மாணவர்கள் என 20 லட்சத்து 875 மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு எழுதுகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் தனியார் உணவகத்தில் சிக்கன் சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு - நடந்தது என்ன?