தீபாவளி திருநாள் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று (நவம்பர் 3) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தொடர்ந்து 5ஆவது ஆண்டாக தீபாவளிக்கு மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக, சிறப்புப் பேருந்துகள் இயக்கத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி, 14 ஆயிரத்து 757 பேருந்துகளும், தீபாவளிக்கு பிறகு 16, 026 பேருந்துகளும் இயக்கப்படும். திருநாளுக்கு முந்தைய நாட்களான 11, 12, 13 ஆகிய தேதிகளில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும்.
வழக்கம் போல் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், தாம்பரம் ரயில் நிலையம், கோயம்பேடு ஆகிய 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஊரப்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளும், முன்பதிவு செய்யப்பட்ட எஸ்.இ.டி.சி பேருந்துகளும் இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு, இதுவரை 27 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு 6 லட்சத்து 71 ஆயிரம் பேர் பயணம் மேற்கொண்ட நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பயணிகள் கூடுதலாக வந்தாலும் அதற்கு தேவையான பேருந்துகள் உள்ளன. பண்டிகைக்கு கார் மற்றும் இதர வாகனங்களில் சொந்த ஊர் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதற்கு பதிலாக திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக செல்ல கேட்டுக்கொள்கிறோம்.
அனைத்து பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் 10 விழுக்காடு போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். கூடுதலாக போனஸ் கோரும் தொழிற்சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அரசின் நிலை குறித்து எடுத்துரைக்கப்படும்“ என்று கூறினார்.
இதையும் படிங்க: திருச்சியில் தீபாவளி திருடர்களை கண்காணிக்க கேமரா கோபுரம்!