அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு பல்கலைக்கழக சிறப்புத் தகுதி வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை முடிவு செய்தது. இதனால் அண்ணா பல்கலைக்கழத்திற்கு சிறப்புத் தகுதி வழங்கினால் தற்போது தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு முறைக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து தெளிவுப்படுத்த மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடிதம் எழுதியது .
இதற்கு மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில், அந்தந்த மாநிலங்கள் இயற்றியுள்ள மாநில சட்டத்திற்குட்பட்டு இட ஒதுக்கீட்டை பின்பற்றிக்கொள்ளலாம் என்று விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை பின்பற்றிக்கொள்ளலாம் எனக் குறிப்பிட்டு கடிதம் அளிக்க வேண்டும் என மீண்டும் தமிழ்நாடு உயர்கல்வித் துறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது.
தமிழ்நாடு அரசு இரண்டாம் முறையாக அனுப்பிய கடிதத்திற்கு கடந்த 12ஆம் தேதி மத்திய அரசு மீண்டும் பதில் கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்திலும் மாநில சட்டத்தின் கீழ் இயற்றப்பட்ட பல்கலைக்கழகங்கள் தற்போதைய நடைமுறையினையே பின்பற்றலாம் என்று தெரிவித்துள்ளது.
அதாவது தமிழ்நாடு அரசு கேட்டதுபோல் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டினை பின்பற்றிக்கொள்ளலாம் என்று நேரிடையாக மத்திய அரசு குறிப்பிடவில்லை. இதனால் தமிழ்நாடு அரசு சார்பில் கேட்ட விளக்கத்திற்கு முழுமையான விளக்கம் கிடைக்கவில்லை.
சீர்மிகு பல்கலைக்கழக சிறப்புத் தகுதி வழங்கும் விவகாரத்தில் தற்போது தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு முறை தொடருமா? என்பது குறித்து மத்திய அரசு உரிய விளக்கம் அளித்த பிறகே, தமிழ்நாடுஅரசு ஒப்புதல் வழங்கும் என்று ஏற்கனவே உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மத்திய அரசு மீண்டும் அனுப்பிய கடிதத்தில் இடஒதுக்கீடு குறித்து முழுமையாக விளக்கம் இடம்பெறவில்லை என உயர் கல்வித் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனிடம் கேட்டபோது, தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டு முறைக்கு பாதிப்பு இல்லாவிட்டால் மட்டுமே அரசு அனுமதி வழங்கும் என்றார்.