உலகளாவிய பெருந்தொற்றுநோயான கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தால் பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்தும் கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தன.
இதனால், இறுதியாண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களின் பருவத் தேர்வை தவிர மற்ற பருவத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகளில் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிப்ரவரி - மார்ச் மாதங்களில் பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் இணைய வழியில் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
தேர்வை எழுதவிருக்கும் மாணவர்கள், அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் முறையாக கட்டணம் செலுத்தி பதிவு செய்துகொள்ளலாம் என பொதுவாக அறிவுறுத்தியிருந்தது. அத்துடன், சிறப்பு தேர்வர்களுக்கு தேர்வு எழுத மறு வாய்ப்பு அளிக்கப்படும் என கூறியிருந்தது.
இருப்பினும், சிறப்புத் தேர்வர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்த அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, சிறப்புத் தேர்வர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்த மறுவாய்ப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்து மாணவர் மணிகண்டன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, சிறப்புத் தேர்வர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்த மறுவாய்ப்பு வழங்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை ஏற்று, அண்ணா பல்கலைக்கழகம் தற்போது சிறப்புத் தேர்வர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்த மறுவாய்ப்பு வழங்கியுள்ளது.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏப்ரல், மே 2020 நடைபெற வாய்ப்பில்லாது போன இள நிலை மற்றும் முதுநிலை மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆன்லைனில் நடத்தப்படும். http://coe1.annauniv.edu என்கிற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
அரியர்ஸ் தேர்வெழுதவுள்ள தேர்வர்கள் பாடங்களுக்கான கட்டணத்துடன் ரூ.5 ஆயிரத்தைச் சிறப்பு கட்டணத்தை செலுத்த வேண்டும்.
ஜன.13ஆம் தேதி முதல் 30ஆம் தேதிவரை கட்டணத்தைச் செலுத்தலாம். ஜன.30ஆம் தேதிக்கு பிறகு கால அவகாசம் நீடிக்கப்படாது. மறுத்தேர்வு எழுதவுள்ள பாடங்களை சரியாக தேர்வுசெய்து கொள்ள வேண்டும். தேர்வு ஆன்லைன் வாயிலாக நடைபெறும், தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என அதில் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் ஜன.27ஆம் தேதி திறப்பு?