கரோனா பரவல் காரணமாக, தமிழ்நாட்டில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி மூடப்பட்டன. ஊரடங்குத் தளர்வுகளுக்குப் பின்னர், கடந்த 2ஆம் தேதி முதுநிலை, ஆராய்ச்சி மாணவர்களுக்கான இறுதியாண்டு வகுப்புகள் மட்டும் தொடங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, கடந்த 7ஆம் தேதி இளநிலை, இறுதியாண்டு மாணவர்களுக்கும் வகுப்புகள், மாணவர்கள் தங்குவதற்கான விடுதிகளும் திறக்கப்பட்டன. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்திலுள்ள விடுதியில் 700 மாணவர்கள் தனித்தனி அறைகளில் தங்கியிருந்தனர். இவர்களில் இரு மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததால், நேற்று(டிச.14) ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
அம்மாணவர்களின் முடிவுகள் வெளியானதில், அவர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது என, கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வர் இனியன் தெரிவித்தார். மாணவர்களின் நலனைக்கருத்தில் கொண்டு, மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.