அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிற்கு கடந்த வாரம் கொலை மிரட்டல் கடிதம் வந்தது. அக்கடிதத்தின் அடிப்படையில் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என சூரப்பா புகார் தெரிவித்ததையடுத்து, கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய, அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அருள் அறம், ” துணைவேந்தர் சூரப்பாவிற்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. துணைவேந்தர் ஒரு நிலைப்பாட்டில் இருந்ததற்காக இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக அறிகிறோம். எனவே கடிதத்தை எழுதியவர் மீது காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காந்தி பிறந்த, திருவள்ளுவர் அறநெறி வளர்ந்த இம்மண்ணில் இதுபோன்ற வன்முறை செயல்கள் ஏற்க முடியாதது. பல்கலைக்கழக வரலாற்றில் முதல்முறையாக இதுபோன்ற மிரட்டல் கடிதம் வந்துள்ளது. எனவே காவல்துறை விரைந்து இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் “ எனக் கூறினார்.
இதுகுறித்து துணைவேந்தர் சூரப்பாவிடம் கேட்டபோது, தற்போது தான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என பதிலளிக்க மறுத்துவிட்டார்.
இதையும் படிங்க: சூரப்பாவுக்கு கொலை மிரட்டல்!