தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு 2020 குறித்து அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகள், உறுப்புக் கல்லூரிகள், மண்டலக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் ஆகிய முதுகலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் 2020-21ஆம் கல்வியாண்டில் சேரலாம்.
எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் ஆகிய பட்டப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை எழுதுவதற்கு ஜனவரி 7ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ’annauniv.edu. tancet.annauniv.edu/tancet/#’ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வர்களின் நலனைக் கருத்தில்கொண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கான தேர்வுக்கூடம் நுழைவுச்சீட்டு பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியிடப்படும்.
- எம்.சி.ஏ. - பிப்ரவரி 29 ஆம் தேதி - காலை 10 முதல் 12 மணி
- எம்.பி.ஏ. - பிப்ரவரி 29ஆம் தேதி - மதியம் 2.30 முதல் 4.30 மணி
- எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் - மார்ச் 1ஆம் தேதி - காலை 10 முதல் 12 மணி
வரையும் நுழைவுத் தேர்வுகள் நடைபெறும்.
சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 15 நகரங்களில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், தேர்வு முடிவுகள் மார்ச் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக சீர்மிகு அந்தஸ்து விவகாரம்...