108 திவ்ய தேசங்களில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ஆலயம் உள்ள புகழ்பெற்றது. இந்த ஆலய வளாகத்தில் வண்ண மயமான கோலங்கள் பெயிண்ட் மூலம் வரையப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆலய வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட தேர்தல் அதிகாரிகள், அங்கு 20க்கும் மேற்பட்ட கோலங்களில், தாமரை வடிவம் இடம் பெற்று இருந்தன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் தாமரை வடிவம் இடம் பெற்ற கோலங்களை மட்டும் சுண்ணாம்பு கலவை மூலம் மறைத்தனர்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளதாவது, "மஹாலட்சுமி அமர்ந்திருக்கும் தாமரையை பக்தி நோக்கத்தோடு பொதுமக்கள் வரைந்திருக்கின்றனர். இது, தேர்தல் நோக்கத்தோடு வரையப்பட்டது அல்ல. அப்படியென்றால் கை காண்பித்தால் தேர்தல் சின்னம் என்று கையை உடம்பிலிருந்து அகற்றி விடுவீர்களா? தினமும் சூரியன் உதிக்கின்றது. தேர்தல் சின்னம் என்று சூரியனை மறைத்து விடுவீர்களா? இந்துமத பழக்கங்களையும், உணர்வுகளையும் அதிகாரத்தின் பெயரால் அழிக்க முற்படுவது கண்டிக்கத்தக்க செயலாகும்.’ என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.