இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவை 40% குறைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்றும், அத்தகைய திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என்றும் வனத்துறையின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சார்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த விளக்கம் தனியார் மருந்து ஆலைகளுக்கு ஆதரவான வனத்துறையின் செயல்பாடுகளை மூடி மறைக்கும் முயற்சி என்பதைத் தவிர வேறில்லை. வேடந்தாங்கல் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஒட்டுமொத்த 5 கிலோ மீட்டர் சுற்றளவும் மையப் பகுதியாக இருந்து வருகிறது.
அதனால் அந்த பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை கட்ட விதிகளை மீறி அனுமதி அளிக்கப்பட்டு ஆம்கோ பேட்டரீஸ் ஆலை 2010-ஆம் ஆண்டிலும் ஆர்டைன் ஹெல்த்கேர் தொழிற்சாலை 2011&ஆம் ஆண்டிலும் திறக்கப்பட்டுள்ளன.
சரணாலயப் பகுதிகளுக்குள் இந்த ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது எப்படி? பறவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான இந்த விதிமீறலுக்கு துணை போனவர்கள் யார்? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்.
தனியார் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக சரணாலயத்தை வகைப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்; இடைநிலைப் பகுதியை அமைப்பதாக இருந்தாலும், சுற்றுச்சூழல் பகுதியை உருவாக்குவதாக இருந்தாலும் அது இப்போதுள்ள 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் தான் செய்யப்பட வேண்டும்.
ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவும் சரணாலயத்தை மையப்பகுதியாக நீடிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அதை பாதிக்கும் வகையிலான அனைத்து முடிவுகளையும் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும்.
விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் கெடுக்கும் எந்த தொழிற்சாலையையும் அங்கு அனுமதிக்கக்கூடாது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தையும், அப்பகுதியில் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து சட்டப் போராட்டங்களையும், அரசியல் நடவடிக்கைகளையும் பாமக எடுக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.