புதுச்சேரி நகராட்சி சார்பில், இருப்பவர் கொடுக்கலாம் இல்லாதவர் பெறலாம் என்ற நோக்கத்தில், அரசு மருத்துவமனை மதில் சுவற்றில், கடந்த எட்டாம் தேதி அன்புச்சுவர் அமைக்கப்பட்டது. துணி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தேவைக்கு அதிகமாக வைத்திருப்போர், அவற்றை எப்படி மற்றவருக்கு கொடுப்பது என தெரியாமல் இருப்போர் கொடுப்பதற்கும், தேவையுள்ளோர் அவற்றை பெறும் நோக்கிலும் இந்த சுவர் நகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்டது.
இதற்கு மக்கள் தாராளமாக உதவிகளை செய்ய முன்வந்து துணி, வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவைகளை ஆர்வத்துடன் அளித்துவந்தனர். இதனால் அன்புச்சுவர், பொருட்களால் நிரம்பி வழிந்தது. மேலும், இல்லாதோர் பெரிதும் பயனடைந்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அன்புச்சுவர் அமைக்கப்பட்டிக்கும் அரசு பொது மருத்துவமனை மதில் சுவற்றில் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சுவற்றுக்கு சாரம் அமைத்து வண்ணம் அடிக்கப்பட்டுவருகிறது. இதனால் அங்கு அமைந்துள்ள அன்புச்சுவர் பகுதி முழுவதும் சேதமடைந்து சுகாதாரமற்று காட்சியளிக்கிறது.
அங்குள்ள துணிகள் மீது வண்ணங்கள், தூசிகள் படுவதைக்கண்டு பொதுமக்கள் கோபம் அடைந்துள்ளனர். பொதுமக்கள் ஆர்வத்துடன் அளித்த துணிமணிகள் அனைத்தும் வீணாக சாலையிலும், சாக்கடையிலும் விழுந்து யாருக்கும் பயனற்று கிடப்பதால், அதனை கடந்து செல்லும் பொதுமக்கள் அன்புச்சுவரை பாதுகாக்கத் தவறிய அரசு மீதும், அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் மீதும் எரிச்சலும் வேதனையும் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆட்டோ ஓட்டுநருக்கு அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவுரை!