12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து சென்னை, தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், கல்வியாளர்கள் ஆகியோருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக அமைச்சர் என்ற முறையில் இன்று (ஜூன்.05) மதியம் 12 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக அனைத்து சட்டப்பேரவைக் கட்சி பிரதிநிதிகளிடமும் கருத்து கேட்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ நிபுணர்களுடனும், மனநல நிபுணர்கள் உடனும் நாளை கலந்தாலோசிக்கவிருக்கிறோம்.
பிற மாநிலங்களின் முடிவுகள்
அதே நேரத்தில், ஒன்றிய அரசு சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வு முறைகளை ரத்து செய்துள்ள நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்துள்ளன. அவர்களின் அடுத்தகட்ட நகர்வு, மதிப்பெண் கணக்கிடும் முறை உள்ளிட்டவை குறித்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றோம்.
எப்போது வழிகாட்டு நெறிமுறைகள்?
அனைத்துக் கருத்துக்களையும் முதலமைச்சர் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறார். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பல்வேறு கருத்துக்கள் வந்துள்ளன. திடீரென தேர்வு என்று அறிவித்தால், அது மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். எனவே தேர்வு அறிவிக்கப்பட்டால் உரிய கால அவகாசம் வழங்கப்படும்.
மாணவர்களுக்கு எந்தவித பாதகமுமின்றி முடிவு எடுக்கப்படும். ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயாராக உள்ளன. வரும் ஜூன் 7ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஒப்புதலுக்குப் பிறகு நெறிமுறைகள் வெளியிடப்படும்” என்றார்.
இதையும் படிங்க: கரோனாவின் அடுத்த துயரம்: காலியான 70 ஆண்டுகால பாரம்பரிய காலிப் பை கடை!