அன்று செய்யும் வேலைக்கு அன்றே சம்பளம் வாங்கி, அதனை அதே நாளில் செலவு செய்யும் அமைப்பு சாரா தொழிலாளர்கள், தொடர் ஊரடங்கால் 42 நாட்களாக வேலையின்றி, கையில் பணமின்றி திண்டாடி வருகின்றனர். இந்நிலையில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் நல வாரியம் மூலமாக நிதி அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான தொழிலாளர்களுக்கு இந்த பணம் சென்று சேரவில்லை.
இது தொடர்பாக பேசிய சிஐடியூ மாநிலச் செயலாளர் சவுந்திரராஜன், "கட்டுமான நல வாரியம் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் நல வாரியம் தவிர்த்து மீதமுள்ளவர்களுக்கு நிதி சென்று சேரவில்லை. ஏதேதோ காரணம் சொல்லி பணம் தர மறுக்கிறார்கள். நல வாரியத்தில் பதிவு செய்யாத, உறுப்பினர் அட்டையை புதுப்பிக்காத தொழிலாளர்கள் என்றாலும், விஏஓ மூலமாகவோ, தொழிலாளர் ஆய்வாளர் மூலமாகவோ அமைப்பு சாரா தொழிலாளர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்க வேண்டும்.
வீடு, வாகனங்கள் வாங்கும் போது கட்டட நல வாரியத்துக்கும், ஆட்டோ நல வாரியத்துக்கும் வரி மூலமாக நிதி வசூலிக்கப்படுகிறது. இது தொழிலாளர்களின் தேவைக்காக கொடுக்க வேண்டிய பணம். பேரிடர் காலத்தில் அந்தப் பணத்தை எடுத்து தொழிலாளர்களுக்கு கொடுப்பது என்பது நாய் வாலை நறுக்கி நாய்க்கே சூப் கொடுக்கும் கதையாக உள்ளது" என்றார்.
கட்டடத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் 29 லட்சம் உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், 14 லட்சம் தொழிலாளர்கள் மட்டுமே உறுப்பினர் அட்டையை புதுப்பித்துள்ளனர். அதேபோல் மற்ற அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் 31 லட்சம் பேர் பதிவு செய்துள்ள நிலையில், அவர்களில் வெறும் 13 லட்சம் பேர் மட்டுமே புதுப்பித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 60 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்களில் வெறும் 27 லட்சம் பேர் மட்டுமே அரசின் நிவாரண உதவி பெறத் தகுதியானவர்கள். அதிலும் பெரும்பாலானவர்களுக்கு அறிவித்தப்படி நிதி வந்து சேரவில்லை என்கின்றனர் தொழிலாளர்கள்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு ஆலோசகர் கீதா, "தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கு பணம் கிடைக்கவில்லை. பதிவு செய்தவர்களிலும் பாதி பேருக்கு கிடைக்கிறது. 60 லட்சம் தொழிலாளர்களில், 27.7 லட்சம் தொழிலாளர்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்துக்கும், முதலமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளோம்.
நரிக்குறவர் நல வாரியத்தை சேர்ந்தவர்களுக்கும், பழங்குடி நல வாரியத்தை சேர்ந்தவர்களுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். அதன்படி தமிழக அரசு சில நல வாரியங்களை பட்டியலில் சேர்த்தது. ஆனால் விவசாய தொழிலாளர்களை உதவி பெறும் பட்டியலில் சேர்க்கவில்லை. 1 கோடிக்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் இருப்பதால் அவர்களுக்கு உதவித்தொகை கொடுக்க முடியாது என அரசு கருதுகிறது. இதற்கான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: ஊரடங்கால் முடங்கிப்போன விசைப்படகு கட்டும் தொழில்!