மக்களவைத் தேர்தலில் போட்டியிட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் குக்கர் சின்னம் கோரப்பட்ட வழக்கில், அமமுக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியில்லை என்ற காரணத்தால், அனைத்துத் தொகுதிகளுக்கும் ஒன்றுபோல் குக்கர் சின்னத்தை அவர்களுக்கு ஒதுக்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் முன்னதாகக் கூறியது.
இதனைத் தொடர்ந்து அமமுகவை கட்சியாக பதிவுசெய்யத் தான் தயாராக இருப்பதாக டிடிவி தினகரன் கூறியதைத் தொடர்ந்து ஏதேனும் ஒரு சின்னத்தை அமமுகவுக்கு ஒதுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி பரிசுப் பெட்டி சின்னத்துடன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மக்களவைத் தேர்தலை சந்தித்தது.
தேர்தல் சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோது, நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி, அமமுகவைக் கட்சியாகப் பதிவுசெய்ய டிடிவி தினகரன் முடிவெடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் ஆறு மாதங்கள் கடந்தும் இதுகுறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளிவரவில்லை.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தில் புதிதாகப் பதிவுபெற்ற தேசிய, மாநில மற்றும் சிறிய கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வதற்கான உத்தரவு தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து அண்ணா திராவிடர் கழகம், உதய சந்திரம் தேசியக் கட்சி, அனைத்து உலகத் தமிழர்கள் முன்னேற்றக் கழகம், அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகம், அனைத்திந்திய இளைஞர் முன்னேற்றக் கட்சி ஆகியவை புதிதாகப் பதிவுபெற்று, அவற்றிற்கு சின்னம் வழங்கக்கோரியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேநேரம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் குறித்து எந்த அறிவிப்பும் அரசிதழில் வெளியாகவில்லை. தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அமமுக இன்றுவரை பதிவு செய்யப்பட்ட கட்சியாக அறிவிக்கப்படாததால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அமமுகவுக்கு சிக்கல்கள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க:
அமமுக கட்சியை பதிவு செய்யும் வேலை நடைபெற்று வருகிறது: டிடிவி தினகரன்!