சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலையாகி பெங்களூரில் தங்கியிருக்கிறார். வருகிற 8ஆம் தேதி சசிகலா தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சசிகலா தமிழ்நாட்டிற்கு வரும் போது அவரை வரவேற்கும் விதமாக அமமுகவினரால் பல்வேறு இடங்களில் பேரணி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னையில், போரூரில் தொடங்கி மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் வரை சுமார் 12 இடங்களில் பேரணியை நடத்த அமமுக கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
கரோனா பரவல் காரணமாக சென்னையில் பேரணி, போராட்டம் போன்றவை அனுமதியின்றி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பேரணி நடத்த அனுமதி கேட்டு அமமுக நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செந்தமிழன் காவல் ஆணையரிடம் மனு ஒன்றை அளித்திருந்தார்.
தற்போது அந்த மனுவை காவல் ஆணையர் நிராகரித்துள்ளார். மனுவில், பேரணியில் எத்தனை பேர் பங்கேற்கிறார்கள் என்ற விபரங்களை தெரிவிக்கப்படாததால் மனு நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா சிறையில் இருந்து வெளிவந்தவுடன் அவரது காரில் அதிமுக கட்சி கொடியை பயன்படுத்தியது தொடர்பாக அதிமுக அமைச்சர்கள் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டு, சசிகலா மீது சட்டபடி நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தெரிவித்து சென்ற நிலையில் சசிகலா தமிழ்நாட்டிற்கு வரும்போது பல்வேறு இடங்களில் அதிமுக கட்சி கொடியை பயன்படுத்த அமமுகவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க...திருமண நிதியுதவித் திட்டத்திற்கு ரூ.726.31 கோடி... இதுமட்டுமல்ல இன்னும் இருக்கு! - தகவல் உள்ளே...