சென்னையிலிருந்து சார்ஜா செல்லும் விமானத்தில் பெருமளவு வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக பெங்களூரில் இருந்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து விமான நிலைய சுங்கத்துறையினர் சென்னையிலிருந்து சார்ஜா, துபாய், அபுதாபி செல்லும் அனைத்து விமான பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து, சந்தேகப்பட்ட பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர்.
சென்னையிலிருந்து சார்ஜா செல்லவிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனார். அப்போது சந்தேகத்திற்கிடமான ஐந்து பயணிகளை நிறுத்தி சோதனையிட்டனார். அதில் நான்கு பயணிகளின் உடமைகளில் வெளிநாட்டு பணம் எதுவும் இல்லை.
ஆனால், கர்நாடகா மாநிலத்தைச் சோ்ந்த 32 வயது ஆண் பயணி ஒருவரின் சூட்கேஸ்சில், கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கா்நாடகா மாநில பயணியிடம் இருந்த ரூ.1.15 கோடி மதிப்பிலான டாலர்களை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அப்போது இந்த பணம் அனைத்தும் கணக்கில் இல்லாத ஹவாலா பணம் என்று தெரியவந்தது. மேலும் இந்த பணத்தை எடுத்து சென்று தற்போது சுங்கத்துறையிடம் சிக்கியிருப்பவர், கூலிக்காக பணத்தை எடுத்து செல்பவர் என்று தெரியவந்தது.
இதனால் முக்கிய நபர் இந்த பணத்தை இவர் மூலமாக வெளிநாட்டிற்கு கடத்துவது தெரியவந்தது. அந்த ஹவாலா பணத்திற்கான உரிமையாளர் யார்? என்று தொடர்ந்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
இதையும் படிங்க: போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்களை அபகரிக்க உதவிய சார்பதிவாளர் மீது வழக்கு