சென்னை: சென்னை புறநகர்ப்பகுதிகளிலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் காவல் நிலையங்களைப் பிரித்து தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது.
தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் தொடங்கப்பட்டு முதல் காவல் ஆணையாளராக பொறுப்பேற்ற ரவி ஐபிஎஸ் அண்மையில் ஓய்வு பெற்றார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு நேற்று அதிரடியாக 44 ஐபிஎஸ் அலுவலர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டது.
அதில் தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் நியமிக்கப்பட்டார். இதையடுத்து சோழிங்கநல்லூரில் உள்ள தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் இன்று அமல்ராஜ் ஐபிஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றபின்னர் காவல் துறையினர்களுக்கு அறிவுரை வழங்கினார். சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து, குற்றங்களைத் தடுத்து, பொதுமக்கள் பாராட்டும் வகையில் செயல்பட முயற்சி செய்வோம் என்று தெரிவித்தார். முன்னதாக ஆணையர் அலுவலகத்திற்கு அமல்ராஜ் வருகை புரிந்தபோது போலீசார் அணிவகுப்பு மரியாதையோடு வரவேற்பு அளித்தனர்.