தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலின் 25 நிர்வாக உறுப்பினர்களுக்கான தேர்தல் 2018ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக 22 புகார்கள் வந்த நிலையில், உரிய தீர்வு கண்ட பிறகே முடிவுகளை வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால், கடந்த ஓராண்டாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில், அகில இந்திய பார் கவுன்சில் 22 புகார்களையும் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த தேர்தலில் போட்டியிட்ட 25 பேர் பார் கவுன்சில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த 25 பேரில் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் தலைவர் பதவிக்கு ஆர்.சி.பால்கனகராஜ், அமல்ராஜ் ஆகியோரும், துணைத்தலைவர் பதவிக்கு சிவசுப்ரமணியன், வேல்முருகன், கார்த்திகேயன் ஆகியோரும், உறுப்பினர் பதவிக்கு பால்கனகராஜ், பிரபாகரன், செல்வம், விடுதலை ஆகியோர் போட்டியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, பால் கனகராஜ், விடுதலை தங்கள் மனுவை திரும்ப பெற்றதால், டி. செல்வம், எஸ். பிரபாகரன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. இதனிடையே அமல்ராஜ் 15 வாக்குகளுடன் தலைவராகவும் , 16 வாக்குகள் பெற்று கார்த்திகேயன் துணைத் தலைவராகவும், 15 வாக்குகளுடன் பிரபாகரன் பார்கவுன்சில் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.