சென்னை: பெருநகர காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பாக, பொதுமக்களுக்கு கரோனா நோய்த் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, வெளி மாநிலங்களிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை அழைத்துச் செல்லும் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு, கரோனா நோய் குறித்து விமான நிலைய போக்குவரத்து காவல்துறை துணை ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை காரில் ஏற்றிச் செல்லும்போது, கட்டாயமாக முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி கொண்டு காரை அடிக்கடி சுத்தம் செய்வது, சானிடைசரை எப்போதும் கையில் வைத்துக் கொள்வது போன்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
அதேபோல், சாலை விதிகளை முறையாக பின்பற்றுவது, அதிவேகப்பயணம் கூடாது, பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வது உள்ளிட்ட அறிவுறுத்தல்களையும் ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து காவல்துறை வழங்கியது. இதில் 50க்கும் மேற்பட்ட வாடகை கார் ஓட்டுநர்கள் கலந்துகொண்டு சாலை விதிகளை பின்பற்ற உறுதிமொழி ஏற்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் குறையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்!