இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவாகப் பணி அனுபவம் உள்ளவர்கள், மத்திய அரசின் தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அளிக்கும் பயிற்சியில் சேர்ந்து படிக்க வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் அறிவித்துள்ளது.
இப்பயிற்சி நிறுவனம் எட்டு பிரிவுகளில் பாடங்களை நடத்த உள்ளதாகவும், இதற்குக் கட்டணமாக 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தனியார் கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பின் நிறுவனர் கே.எம். கார்த்திக், பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள புகார் மனுவில், ”கடந்த 13ஆம் தேதி ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஐந்தாண்டுகளுக்குக் குறைவான பணி ஆசிரியர் 10,000 ரூபாய் பணம் கட்டி பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும். ஏனெனில் ஏழாவது ஊதியக்குழு அரசாணையின்படி அவர்கள் ஊதியம் பெறுகிறார்கள் என்று காரணம் காட்டப்பட்டுள்ளது.
100இல் ஒரு கல்லூரி மட்டுமே ஆறாவது ஊதியக்குழுவின்படி ஊதியம் கொடுத்துவருகிறது. ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரையை 100இல் ஒரு கல்லூரி மட்டுமே பின்பற்றுகிறது. அப்படி இருக்கையில் ஏழாவது ஊதியக்குழுவின் 'அரசாணையை' மட்டும் கணக்கில் வைத்துக்கொண்டு எவ்வாறு ஆசிரியரிடம் 10,000 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது?
நாட்டில் 90 விழுக்காடு தனியார் பொறியியல் கல்லூரிகளே உள்ள நிலையில் அவைகளின் 99 விழுக்காடு கல்லூரிகள் அரசாணைப்படி ஊதியம் கொடுப்பது கிடையாது. அதன் காரணமாகவே தனியார் ஆசிரியர்கள் வருமான வரி வரம்புக்கு கீழ் உள்ளனர். ஏஐசிடிஇ இதுவரை ஏதாவது ஒரு ஆசிரியரின் ஊதியக் குறையை கேட்டதாகவோ அல்லது அதற்காகச் சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரியை தண்டித்ததாகவோ முன்னுதாரணங்கள் இல்லை.
அதனால் ஆசிரியர்களுக்கு உண்மையாகவே ஏழாவது ஊதியக்குழு அரசாணையின்படி ஊதியம் கொடுப்பதை வருமான வரி அலுவலகம் உறுதிசெய்யும் வரை, இந்தப் பயிற்சி வகுப்பிற்கு கட்டணம் பெறாமல் இலவசமாக நடத்த வேண்டும். இன்றைய தேதியில் ஒரு ஆசிரியர் சராசரியாக மாத வருமானம் 12,000 ரூபாய் மட்டுமே பெறுகிறார் “ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு தாய்மொழிக் கல்வி கட்டாயம் சிறப்பு சட்டம் இயற்றும் மகாராஷ்டிரா