சென்னை: சசிகலாவை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக, கடந்த வாரம் தேனி மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு தீர்மானம் நிறைவேற்றினர். இந்நிலையில், ஓபிஎஸ் சகோதரர் ஓ. ராஜா கடந்த வாரம் சசிகலாவை நேரில் சென்று பார்த்து சசிகலா விரைவில் அதிமுகவின் தலைமை ஏற்பார் என்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
இந்த செய்தி தீயாக பரவி அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், கட்சியில் இருந்து ஓ. ராஜா மற்றும் அவருடன் சென்ற அதிமுக கட்சி நிர்வாகிகள் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.
ஜெயலலிதா படம்போட்ட கேக்
இந்தநிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அதிமுக தலைமையகமான ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படம் பொறித்த கேக் வெட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் சேர்ந்து பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாகவும், சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைப்பது தொடர்பாகவும் பேசப்பட்டதாக தெரிகிறது.
வெற்றி தோல்வி இயல்புதான்
இந்நிகழ்வில், ஓபிஎஸ், இபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்கு மகளிரணி செயலாளர் பா.வளர்மதி, அமைப்பு செயலாளர் கோகுல இந்திரா ஆகியோர் கேக் துண்டுகளை வழங்கினர். மேலும் 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கட்சியின் மகளிர் அணி மாநிலச் செயலாளர் பா.வளர்மதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அனைத்து மகளிரணி செயலாளர்களும் இன்று உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். ஜெயலலிதா காலம் முதல் மகளிர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடுகிறோம்.
மகளிரணியினர் மாவட்ட ஒன்றிய அளவிலும் சிறப்பாக கொண்டாடுகின்றனர். மகளிரணி அதிகம் உள்ள கட்சி அதிமுகதான். கட்சிக்காக சிறைச்சாலை சென்று முதல்குரல் கொடுத்தது மகளிரணிதான். அரசியல் கட்சிகளுக்கு வெற்றி தோல்வி இயல்புதான். தோல்வி வெற்றிக்கான வழிகாட்டி. தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலும் தோல்வியை சந்தித்துள்ளோம்.
கோர்த்துவிடாதப்பா...
அதிமுகவில் இருபெரும் தலைவர்கள் இருக்கின்றனர். முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களிடம்தான் இருக்கிறது. சசிகலா உள்பட அனைவரையும் குறித்து கட்சித் தலைமை எடுக்கும் முடிவுப்படி நடப்போம்" என்று கூறினார்.
மேலும், சசிகலா இணைப்பை நீங்கள் ஆதரிப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "ஊடகங்கள் எதையாவது கேட்டு எங்களை கோர்த்து விடாதீர்கள். மேலும், இதுபோன்ற விஷயங்களில் செய்துவிடாதீர்கள். தலைமையின் முடிவுக்கு எப்போதும் கட்டுப்படுவோம்" எனத் தெரிவித்தார்.
அதிமுகவின் இருபெரும் தலைவர்களையும் தொண்டர்கள் ஏற்றுள்ளனர் என்று கூறிய வளர்மதி அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள் என்று கூறினார். அப்போது, சசிகலாவிற்கு மகளிர் தின வாழ்த்துகள் உண்டா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியவுடன், வளர்மதி பதிலளிக்காமல் சிரித்தார். மீண்டும் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள் என்று கூறி செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: வருகிற மார்ச்-18இல் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் - சபாநாயகர்