சென்னை: கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் இன்று (ஜூலை 6) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "கடந்த ஜூன் மாதம் நடந்த பொதுக்குழுவிற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட்டு அழைப்பிதழ் வந்தது. தற்போதைய அழைப்பிதழில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பெயர் இல்லை. தலைமை கழக நிர்வாகிகள் என்ற பெயரில் உள்ளது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் தலைமை கழகம் எப்படி கடிதம் அனுப்ப முடியும். யார் அந்த கடிதத்தை கொடுத்தார்கள்? அது உண்மையா என தெரியவில்லை; அந்த அழைப்பிதழ் எடப்பாடிக்கு துதி பாடுகிற அழைப்பிதழ் ஆகும்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தகுதி இல்லாமல் விமர்சனம் செய்கிறார். பன்னீர்செல்வத்தை பற்றி பேச அவருக்கு எந்த உரிமையும் இல்லை. இதுபோன்று பேசினால் சிறைக்கு அனுப்பப்படுவார் என்று எச்சரிக்கை விடுக்கிறேன். மாதவரம் மூர்த்தியை வரவழைத்து ஒற்றை தலைமையை குறித்து எடப்பாடி பேச வைத்தவர். அதிமுக என்ன எடப்பாடியின் குடும்ப கட்சியா? அதிமுக எடப்பாடி உருவாக்கிய கட்சி அல்ல; அது எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி ஆகும்.
கடந்த 2001 மற்றும் 2014 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் ஆக்கினார். 2016 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கவில்லை. அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம் தான் உள்ளனர்.
கொடநாடு வழக்கில் 4 ஆண்டுகளாக காலம் தாழ்த்தப்பட்டுள்ளது. கொடநாடு வழக்கில் தவறு செய்தவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து கண்டுபிடித்து தண்டனை வாங்கி தர வேண்டும். கடந்த 4 ஆண்டு அதிமுக ஆட்சியில் கொடநாடு வழக்கு முறையாக நடக்கவில்லை.
தமிழ்நாடு முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அனைத்து பகுதிகளிலும் பெட்டி வைத்து ஓட்டு எண்ணிக்கை நடத்தினால் ஒரு கோடி வாக்கு வித்தியாசத்தில், ஓபிஎஸ் வெற்றி பெறுவார். அதிமுக அழிவு பாதைக்கு சென்று கொன்று இருக்கிறது. விரைவில் 17 முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும்" என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அண்ணாமலை ஊழல் பட்டியலை கொடுக்கும்போது பார்க்கலாம் - அமைச்சர் முத்துசாமி!