சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் பாபு முருகவேல் தாக்கல் செய்துள்ள மனுவில், ”தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பதற்கான தேர்தல் அட்டவணையை கடந்த 26 ஆம் தேதி அறிவித்தது.
பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதாகவும், பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில் தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக தேர்தல் ஆணையம் எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுமார் 80 ஆயிரம் காவல்துறை பணியாளர்களையும், ஒரு லட்சத்து 30 ஆயிரம் அரசுப் பணியாளர்களையும் தேர்தல் அலுவலர்களாக நியமிப்பதாக தெரிவித்துள்ளது.
தேர்தல் அலுவலர்கள், தேர்தல் பணியில் ஈடுபடும் போது அவர்களுக்கு தபால் வாக்கு உரிமை வழங்கப்படும் என்றும், அதன் அடிப்படையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தபால் வாக்குகளை தேர்தல் நாட்களுக்கு முன்பாகவே செலுத்தி விடுவார்கள்.
இந்த தேர்தலை பொறுத்தவரை மிகக் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும், தோல்வியும் தீர்மானிக்கப்படும் என்பதால் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளில் பயன்படுத்தப்பட்ட ஊரக உள்ளாட்சி பகுதிகளில் வசிக்கக்கூடிய அரசு அலுவலர்களையும், காவல்துறை பணியாளர்களையும் இந்த தேர்தலுக்கு தேர்தல் அலுவலர்களாகவும், காவல் துறை அலுவலர்களாகவும் பயன்படுத்த வேண்டும்.
தபால் வாக்கு என்ற முறையை இந்த தேர்தலில் முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும், வாக்கு எண்ணும் போது தபால் வாக்குகளில் தான் மிகப்பெரிய முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது, தபால் வாக்குகள் சம்பந்தமாக உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் இன்றளவும் நிலுவையில் உள்ளது.
மேலும், அதற்காக அரசுக்கு ஏற்படும் கால விரயமும், பண விரயமும் முற்றிலுமாக தவிர்க்கப்படும் என்பதால் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்துள்தோம். அந்த மனுவின் மீது உரிய நடவடிக்கையை எடுக்கப்படவில்லை.
எனவே, உடனடியாக அந்த மனுவின் அடிப்படையில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்; தெலுங்கர் கூட்டமைப்பு திமுகவுக்கு ஆதரவு!