சென்னை: பட்டினப்பாக்கம் இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது ஜனநாயக கடமையாற்ற வேண்டும். அந்த வகையில் தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் என அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம்.
ஜனநாயக விரோத செயல்
திமுக ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் நாளன்று பிரச்சாரத்தில் ஈடுபட கூடாது என்ற விதி உள்ளது, ஆனால் அதை பின்பற்றாமல் திமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, முழுமையாக கண்காணிப்பு செய்ய வேண்டும் எனவும், மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு தேர்தல் ஆணையமும், தமிழ்நாடு அரசும் உறுதியளித்தது. ஆனால் இதனை திமுக அரசு காற்றில் பறக்கவிட்டுள்ளது.
மேலும், குறைவான வாக்குச்சாவடிகள் மட்டுமே உள்ள நிலையில், வாக்குப்பதிவு மையத்தில், வெப் கேமரா பொருத்தாமல் மேனுவல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வாக்குசாவடிகளில் ஏஜெண்டுகள் அமர்வதற்கு நாற்காலிகளும் வழங்கப்படவில்லை, வாக்குச்சாவடிகளை கைப்பற்ற போவதாக தகவல் வந்துள்ளது.
தேர்தல் ஆணையத்தை நம்பும் திமுக
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், 200 வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளோம் என கூறுகின்றனர். ஆனால் அதன் பட்டியல் இன்னும் கிடைக்கவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்களிடையே திமுக செல்வாக்கை இழந்துள்ளது. இதுகுறித்து மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் முதலமைச்சர், உதயநிதி, கனிமொழி ஆகியோர் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை. இதனால் குறுக்கு வழியில் தேர்தலை எதிர்கொள்கிறது. திமுக நம்பியுள்ளது தேர்தல் ஆணையத்தை மட்டுமே, அவர்கள் விதியை மீறினால் அதிமுக நீதிமன்றத்தை நாடப்படும்.
கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முறைகேடாக சந்தித்தது. இதனால் தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்து மறு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்புகள் வெளி வந்ததை திமுக மறந்துவிட கூடாது.
அதிமுக அமோக வெற்றி பெறும்
அதிமுக அரசின் சாதனைகள் மக்களிடையே சென்றடைந்துள்ள காரணத்தால் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் மக்களிடம் சென்றுள்ளனர். திமுக அராஜகத்தின் மூலம் வெற்றிபெற நினைக்கின்றனர். உள்ளாட்சி தேர்தல் அமைதியான, நேர்மையான, சுதந்திரமான தேர்தலாக நடந்தால் அதிமுக அமோக வெற்றி பெறும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஸ்டாலின் உத்தரவை ஏற்று கேரள முதலமைச்சரைச் சந்தித்த திமுக எம்பிக்கள்!