தமிழ்நாடு அரசின் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 14) தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, சென்னை தலைமை செயலகத்தில் வேளாண் உற்பத்தி ஆணையர், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
பனை மரம் வெட்ட அனுமதி வாங்க வேண்டும்
அப்போது பேசிய அவர், “இந்த நிதிநிலை அறிக்கையில், விவசாயத்தின் பரப்பளவை அதிகப்படுத்தி, சாகுபடியை அதிகரிக்க முதலமைச்சரின் தொலைநோக்கு திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் விலை பொருள்களை நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யும் வகையில் சந்தைகள் ஏற்படுத்தல், மானாவரி நிலைத்தை மேம்படுத்துதல், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல், வேளாண் துறையில் முன்னேற்றம் காணுதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருக்குவது, பயிர் ஆராய்ச்சி ஆகியவற்றில் கடந்த காலத்தை விட ஆயிரத்து 700 கோடி ரூபாய் கூடுதலாகவும், இடைநிலை நிதி அறிக்கையைவிட 900 கோடி ரூபாய் அதிகமாகவும் நிதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், இயற்கை விவசாயத்திற்கு, இயற்கை உரங்களை அளிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பனை மரம், மாநில மரம் என்பதால் அதனைப் பாதுகாக்கும் வகையில் அவற்றை வெட்டுவதற்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் உத்தரவு பெற வேண்டும் என்று இந்த நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை, ஆணை பிறப்பிப்பது உள்ளிட்ட பணிகள் ஓரிரு வாரத்தில் தொடங்கப்படும்” என்றார்.
கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை
தொடர்ந்து பேசிய அவர், “விவசாயத்திற்கு 400 புதிய இயந்திரங்கள் வாங்கி, குறைந்த வாடகையை விவசாயிகளுக்கு கொடுக்கப்படும். செயலி மூலமாக பதிவு செய்து அதற்கான நலனை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி கரும்பு விவாசயிகளுக்கு தர வேண்டிய நிலுவை தொகையில் தனியார் ஆலைகள் 314 கோடி ரூபாயும் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 187 கோடி ரூபாயும் நிலுவையில் உள்ளது. அதேபோல் கிண்டியில் வேளாண் ஏற்றுமதி நிலையம் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்நிலையில் ஒன்றிய அரசின் வேளாண் சட்டம் செயல்படுத்தலாமா என்பதை அரசுதான் முடிவெடுக்க வேண்டும். தமிழ் வழியில் வேளாண் கல்வியை வரும் கல்வியாண்டில் செயல்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளதா என்பதை ஆராய்ந்து வருகிறோம்.
இந்தாண்டு முடியாவிட்டாலும், அடுத்தாண்டுகளில் வேளாண் கல்வி தமிழ் வழியை கல்வி செயல்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வேளாண் நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்