நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தப் பரவலை தடுக்க மத்திய அரசு மூன்றாவது முறையாக ஊரடங்கை மே 17ஆம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளது. சென்னையில் தினமும் நூற்றுக்கு மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு நிபந்தனைகளுடன் ஊரடங்கில் சிறிய தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி, அரசு அலுவலகங்கள், ஐடி நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள் குறிப்பிட்ட பணியாட்களுடன் இயங்கலாம் என அறிவித்தது. மேலும், பணிக்கு செல்வோர் இருசக்கர வாகனங்களில் ஒருவரும், நான்கு சக்கர வாகனங்களில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்கலாம் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
பழைய மகாபலிபுரம் சாலையில் ஐடி நிறுவனங்கள், உட்பட பல்வேறு நிறுவனங்கள் அமைந்துள்ளன. ஊரடங்கு காரணத்தினால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டு, பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில், ஐடி நிறுவனங்களை 10 சதவீத ஊழியர்களோடு இயக்கலாம் என அரசு அறிவித்தும், பாதுகாப்பு கருதி பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் இயங்கவில்லை. சிறிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமே திறந்திருக்கின்றன. இதனால் பழைய மகாபலிபுரம் சாலை வழக்கமாக செல்லும் வாகனங்களில் 10% கூட இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
இதையும் படிங்க: தளர்வுகள் அறிவித்தும் அரசு கட்டுமானத் தொழில் தொடங்கவில்லை!