கரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பொது போக்குவரத்து முடக்கப்பட்டு, ஆறு மாதத்திற்குப் பிறகு கடந்த மாதம் மாநிலத்தில் பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்பட்டது. இருப்பினும், வாகனத்தை இயக்காத நாட்களுக்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் தமிழக அரசிடம் வரிவிலக்கு கோரியும், உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். பின்னர், வரி விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் இன்று(அக்.16) முதல் தனியார் பேருந்துகள் இயங்குகின்றன.
சாதாரண நாட்களில் 2,500 பேருந்துகளும், விடுமுறை நாட்களில் 4,000 பேருந்துகளும் இயக்கப்பட்டு வந்த நிலையில், 500 பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதைவிட குறைவான அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பகல் நேரத்தில் இயக்கப்படவில்லை.
பெருந்தொற்று காரணமாக மக்கள் பயணம் செய்வது குறைந்துள்ளதால், ஒரு பேருந்துக்கு நான்கு முதல் ஐந்து பேர் மட்டுமே இருப்பதாகவும், இதனால் பேருந்துகளை இயக்க முடியவில்லை என்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூறுகின்றனர். மேலும், அரசு அறிவித்துள்ளபடி வெப்ப நிலையை 25 டிகிரி செல்சியசுக்கு மேல் வைத்து குளிர் சாதன பேருந்துகளை இயக்கினால், பயணிகள் பயணம் செய்ய இயலாது என்பதால் பெரும்பாலான குளிர் சாதன பேருந்துகள் இயக்கப்படவில்லை.
தற்சமயம் TN, AR, NL, OD ஆகிய பதிவு கொண்ட பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட உள்ளதாகவும், புதுச்சேரியில் வரிவிலக்கு தொடர்பான இறுதி முடிவு எட்டப்படாததால், அங்கு பேருந்துகள் இயக்கப்படாது எனக் கூறியுள்ளனர். தற்போது குறைவாகவே இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை, பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் என்றும், தனியார் பேருந்து உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ”ஸ்டாலினை குறைகூறும் காமராஜ்தான் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் கோட்டையில் அமர்ந்திருக்கிறார்” - எ.வ.வேலு பதிலடி!