தமிழ்நாட்டில் காலியாக இருந்த ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கானத் தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்து வேட்புமனு பரிசீலனை கடந்த 16ஆம் தேதி நடந்தது. வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாக இன்று (18ஆம் தேதி) 3 மணிவரை அறிவிக்கப்பட்டது.
மாநிலங்களவைத் தேர்தலில் தாக்கலான ஒன்பது வேட்புமனுக்களில் மூன்று மனுக்கள் போதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால் நிராகரிக்கப்பட்டன. இதனால் அதிமுகவின் கே.பி. முனுசாமி, மு. தம்பிதுரை, ஜி.கே.வாசன் (தமாகா), திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராசு ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டு, போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதால் ஆறு வேட்பாளர்களையும் வெற்றி பெற்றதாக பேரவைச் செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசன் அறிவித்தார்.
இதனையடுத்து திமுக வேட்பாளர்கள் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராசு ஆகியோர் தாங்கள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசனிடம் இன்று பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு, சட்டப்பேரவைக்குழு காங்கிரஸ் தலைவர் ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'திமுக ஆட்சியில் டெண்டர்கள் எப்படி விடப்பட்டன? லிஸ்ட் என் கையில்...!' - முதலமைச்சர்