சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான தஹில் ரமாணியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மேகாலயா உயர் நீதிமன்றந்த்தின் தலைமை நீதிபதி அஜய் குமார் மிட்டலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியிடமாறுதல் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் கடந்த வாரம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து தன்னை மாற்றம் செய்ய வேண்டாம் என்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணியின் கோரிக்கையையும் கொலிஜியம் நிராகரித்தது. இதனால், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி அதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவருக்கும் ரமாணி அனுப்பிவைத்தார்.
இந்நிலையில், தலைமை நீதிபதியின் மாற்றம் என்பது பழிவாங்கும் செயல், அதனால் தலைமை நீதிபதியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு பணியிடமாறுதல் செய்யும் முடிவை கொலிஜியம் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், பெண் வழக்கறிஞர்கள் சங்கம் இணைந்து இன்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆதரவு தெரிவித்திருப்பதால் நீதிமன்ற வழக்குகள் பாதிக்கப்பட்டன.