சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசு தேர்வு செய்யும் சட்ட மசோதாவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேரவையில் தாக்கல் செய்து, விவாதங்களுக்குப் பின் நிறைவேற்றப்பட்டது.
துணைவேந்தர் நியமனம் - தற்போதைய நடைமுறைகள் என்ன?: பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய தேடுதல் குழுவை ஆளுநர் அமைப்பார். பல்கலை., சிண்டிகேட் பிரதிநிதி, ஆளுநர் மற்றும் தமிழ்நாடு அரசின் பிரதிநிதி இக்குழுவில் இடம்பெறுவார்கள். தேடுதல் குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிடும்.
விண்ணப்பங்கள் பெறுவதற்கான அறிவிப்பு ஆளுநரின் உத்தரவுப்படி நாளிதழ்களில் வெளியாகும். விண்ணப்பம் செய்ய உரிய அவகாசம் அளிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும். பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து தேடுதல் குழு நேர்காணல் நடத்தும். குழு, நேர்காணலில் மூன்று பேரை தேர்வு செய்து ஆளுநருக்கு அனுப்பிவைக்கும். மூன்று நபர்களில் இருந்து தகுதியான ஒருவரை ஆளுநர் துணைவேந்தராக நியமனம் செய்வார். அதற்கான ஆணையில் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற அடிப்படையில் கையெழுத்திடுவார்.
பூஞ்சி ஆணையம் பரிந்துரை: 'ஒன்றிய - மாநில அரசு உறவுகள்' குறித்து ஆராய 2007இல் நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணையம் அளித்துள்ள பரிந்துரையில், “அரசியல் சட்டத்தில் வழங்கப்படாத துணைவேந்தர் நியமன அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக்கூடாது” என்று பரிந்துரைத்துள்ளது.
மேலும் குஜராத், ஆந்திரா, தெலங்கானா பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசுகள் நியமிக்கின்றன. இந்நிலையில், மாநில அரசுகளே துணைவேந்தர்களை நியமிக்கலாம் என பூஞ்சி ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை ஏற்று, பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை இனி மாநில ஆளுநருக்குப் பதிலாக, மாநில அரசே நியமனம் செய்யும் வழிவகை சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்களுக்குப் பின்பு நிறைவேற்றப்பட்டது.
சட்ட மசோதாவை நிறைவேற்றிய பின் என்ன ஆகும்?: இதன் காரணமாக இதுவரை ஒரு பல்கலைக்கழகத்திற்கு தேர்வுக்குழு பரிந்துரைக்கும் மூன்றில் ஒருவரை, மாநில ஆளுநர், துணைவேந்தராக நியமனம் செய்யும் நடைமுறை இருக்காது. அதற்குப் பதிலாக தேர்வுக்குழு பரிந்துரை மீது அரசே முடிவு செய்து துணைவேந்தர்களை நியமனம் செய்யும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: துணைவேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றம்!