தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சியின் மறைமுக தேர்தலின்போது, திமுக கவுன்சிலர் கடத்தப்பட்டதாக கூறி கூட்டணி கட்சி உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதன்காரணமாக தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து தலைவர் பதவிக்கு போட்டியிட இருந்த ம.க.ஸ்டாலின் உள்ளிட்ட எட்டு உறுப்பினர்கள், காவல்துறை பாதுகாப்புடன், தாமதமின்றி மறைமுக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் முதல் விசாரணையின்போது, தேர்தல் நாளான்று பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை நீதிபதிகள் பார்வையிட்டனர். அந்த வீடியோவில் ரகளையில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், மறைமுக தேர்தலை நடத்திய அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மார்ச் 26ஆம் தேதிக்கு பதிலாக மார்ச் 23ஆம் தேதியே தேர்தல் நடத்தபடும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மனுதாரர்கள் தரப்பில், தேர்தல் நடக்கும்போது மீண்டும் ரகளை சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இறுதியாக நீதிபதிகள், மறைமுக தேர்தலை நடத்த சுதந்திரமான அதிகாரியை மாநில தேர்தல் ஆணையம் நியமிக்க வேண்டும்.
தேர்தல் நாளன்று தேவையான பாதுகாப்பை தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் இதேபோன்ற சம்பவம் மீண்டும் நிகழ்ந்தால், தேர்தல் அதிகாரிகள் மட்டுமல்லாமல் காவல்துறையினரும் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என்று எச்சரித்து விசாரணையை மார்ச் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ஆடுதுறை பேரூராட்சி தேர்தல் ஒத்திவைப்பு... தேர்தல் நடத்தும் அலுவலர் விளக்கமளிக்க உத்தரவு...