தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு இதுவரை இல்லாத அளவு இருக்கிறது. இதனால் மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். இந்தச் சிக்கல் குறித்து விவாதிக்க நீண்ட இழுத்தடிப்புக்கு பிறகு நேற்று ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு கேரளாவிடமிருந்து தண்ணீர் பெறுவது, குடிநீர் பிரச்னையை தீர்க்க 200 கோடி ரூபாய் ஒதுக்கியது என முதலமைச்சர் சில முடிவுகளை முன்வைத்தார். மேலும், ‘நான் ஒரு நாளைக்கு இரண்டு வாளி தண்ணீர் பயன்படுத்துகிறேன்’ என விளக்கமும் அளித்தார்.
இது ஒருபுறம் இருக்க துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மத்திய அரசிடம் ரூ.1000 கோடி நிதியுதவி கோரினார். அந்தப் பணம் வருமா என்பது மழை வருமா... வராதா என்று கேட்பதற்குச் சமம் என்று பலர் புலம்புகின்றனர்.
மேலும், மழை வேண்டி யாகம் நடத்தும்படி அனைத்துக் கோயில்களிலும் அதிமுக சார்பில் யாகம் நடத்த வேண்டும், அதில் அனைத்து மாவட்ட செயலாளர்களும், எம்.எல்.ஏக்களும், நிர்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும் என ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.
மேலும், அவர்கள் தங்களது தொண்டர்களை மரம் நடுதல், ஏரி குளங்களை தூர் வாருதல், நீரை சேமித்தல் உள்ளிட்ட காரியங்களையும் செய்ய சொல்லியிருக்கலாம் என்பது நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது.