சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, அதன் கூட்டணி கட்சிகள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்த மூன்று நிர்வாகிகளை, கட்சியிலிருந்து நீக்குவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஒபிஎஸ்-இபிஎஸ் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் வகையில், நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ள காரணத்தால்,
மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிரம்மர் சுரேஷ் (கழக எம்ஜிஆர் அணி இணைச் செயலாளர்), புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த சி. அழகுசுப்பையா (பொன்னமராவதி ஒன்றியக் கழக முன்னாள் செயலாளர்), விருதுநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கோகுலம் எம். தங்கராஜ் (விருதுநகர் மேற்க மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர்) ஆகியோர் இன்று (மார்ச்.22) முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்கள்.
இதையும் படிங்க: 'ஓசூர் தொழில் வளர்ச்சி பெற்ற பகுதியாக மாறியுள்ளது’ - முதலமைச்சர்