இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்
எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள ’மே தின’ வாழ்த்துச் செய்தியில், “ அநீதிகளையும், எளியோரை வலியோர் அடக்கி ஆளும் கொடுமைகளையும் எதிர்த்து நடைபெற்ற தொழிலாளர் புரட்சியில் பூத்திட்ட நறுமலர்தான் இந்த `மே' தினம்.
உழைப்பவர்களின் மனித மாண்பையும், உரிமைகளையும் நிலைநாட்ட 1886-ஆம் ஆண்டு, மே மாதம் அமெரிக்காவின் சிகாகோ நகரில் தொழிலாளர்கள் மேற்கொண்ட பேரணி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிர் தியாகம் செய்து, தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுத்ததன் நினைவாக உழைப்போர் அனைவருக்கும் நன்றிகளையும், வணக்கத்தையும் தெரிவிக்கும் நன்நாளாம் மே தினத்தில், ’உழைப்போரே உயர்ந்தவர்’ என்று உரக்கச் சொல்வோம்.
கொடிய நோய்த் தொற்றால் அல்லல் படும் இன்றைய உலகம், நாளை உற்சாகத்துடன் வீறுகொண்டு எழுந்து, புதியதோர் உலகம் செய்யப்போவது உழைப்பாளர்களின் உழைப்பினாலேயே ஆகும். தளர்வறியா உழைப்பின் மூலம் நமது நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளப் பெருமக்கள் அனைவருக்கும் எங்களது உளமார்ந்த `மே தின' நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறோம் ” என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆதரவற்றோருக்கு உதவிய காவல் துறை