சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமை அலுவலகத்தில் சட்டப்பேரவை தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தல் குறித்தும், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டேன்.
அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்ற இலக்கில் அமமுக பயணித்து வருகிறது. சட்ட ரீதியாக அதிமுகவை மீட்டெடுக்கும் பணிகளில் சசிகலா ஈடுபட்டுள்ளார். இருவரும் தனித்தனியாகச் சென்று கொண்டிருந்தாலும், இலக்கு அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான்.
கோடநாடு கொலை விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு அரசு சரியான பாதையில் விசாரணை நடத்தி வருகிறது. மடியில் கனம் இல்லாதவர்கள், வழக்கு விசாரணையை கண்டு அஞ்சத் தேவையில்லை.
எடப்பாடி பழனிச்சாமி அரசியல் ரீதியாக பலவீனமாக உள்ளார். நாய்க்குக் கூட நன்றி உள்ளது. ஆனால், அவர் நான்கு கால் பிராணி போல் தவழ்ந்து வந்து பதவி பெற்றது அனைவருக்கும் தெரியும்.
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை தேவையில்லை. அரசியலுக்காக இந்த ஆணையம் செயல்பட்டு வருகிறது. ஓபிஎஸ் ஏதோ கோபத்தில், ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என கேட்டுள்ளார். திமுகவும், ஜெயலலிதா மரணத்தை அரசியலுக்காகப் பயன்படுத்துகிறது.
உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதன் விளைவாகப் பல இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது" என்று கூறினார்.
இதையும் படிங்க: நான் ஜெயலிதாவின் மகள் - சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற பெண்ணால் பரபரப்பு