அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் வயது மூப்பின் காரணமாக நேற்று (ஆக. 05) சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் காலமானார்.
இதனைத் தொடர்ந்து அவரது உடல் மருத்துவமனையிலிருந்து இன்று (ஆக. 06) அதிகாலை 4 மணியளவில் கோதண்டராமன் தெருவிலுள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பின்னர் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் பார்வைக்காக அவரது இல்லத்தில் கண்ணாடிப் பெட்டிக்குள் அவரது உடல் வைக்கப்பட்டது.
இன்று காலை ஏழு மணியளவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பல முன்னாள் அமைச்சர்கள் ஒன்றாக இணைந்து மதுசூதனனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
கட்சித் தலைவர்கள் அஞ்சலி
பின்னர் எட்டு மணியளவில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆர்.கே. நகர் தொகுதி எம்எல்ஏ எபினேசர், சென்னை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இளைய அருணா ஆகியோருடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வந்து மதுசூதனனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோரிடம் மதுசூதனனின் மரணம் குறித்து மு.க.ஸ்டாலின் விசாரித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்துசென்ற நிலையில், 10 மணியளவில் சசிகலா தனது தொண்டர்களோடு வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி மதுசூதனனின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
உடல் நல்லடக்கம்
பிற்பகல் ஒரு மணியளவில் தண்டையார்பேட்டை கோதண்டராமன் தெருவிலிருந்து மதுசூதனன் உடலை ஊர்வலமாக திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக எடுத்துச்சென்று மூலக்கொத்தளம் சுடுகாட்டில் நல்லடக்கம் செய்தனர்.
இதையும் படிங்க: 'கருணாநிதி 3ஆம் ஆண்டு நினைவு நாள்: 2ஆவது ஆண்டு மெய்நிகர் மாரத்தான் போட்டிகள்!'