சென்னை: அதிமுகவைச் சேர்ந்த சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை செய்து முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்துள்ளனர்.
முதல் தகவல் அறிக்கையில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடியே 22 லட்சத்து 56 ஆயிரத்து 736 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதில் முதல் குற்றவாளி விஜயபாஸ்கர் எனவும், இரண்டாவது குற்றவாளி விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா எனவும் கூறப்பட்டுள்ளது.
வெளியூர் சென்றதால் சீல்
இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் 48-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று (அக்டோபர் 18) சோதனை நடத்தியதில் 4.87 கிலோ நகைகள், ரூ. 24 லட்சம் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை ஆயிரம் விளக்கில் விஜயபாஸ்கருக்குத் தொடர்புடையவரான சந்திரசேகர் என்பவரது அலுவலகம் சீல்வைக்கப்பட்டுள்ளது. சந்திரசேகர் வெளியூர் சென்றுள்ள நிலையில், அந்த அலுவலகத்தைத் திறக்க முடியாத காரணத்தால் சீல்வைக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தொடர் சோதனைகளில் சிக்கித் தவிக்கும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்!