அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதனையடுத்து திமுக மற்றும் அமமுக கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இதற்கிடையே அதிமுக தனது வேட்பாளர்களை எப்போது அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடையே எழுந்திருந்தது. இந்நிலையில், நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது.
அதன்படி, அரவக்குறிச்சியில் செந்தில்நாதன் (கரூர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர்), திருப்பரங்குன்றத்தில் முனியாண்டி (அவனியாபுரம் பகுதி அதிமுக செயலாளர்), சூலூரில் கந்தசாமி (கோவை புறநகர் மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைத் தலைவர்), ஒட்டப்பிடாரத்தில் மோகன் (தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக துணைச் செயலாளர்) ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.